

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரப் பிரதேச அரசு மேலும் ஒரு அதிரடி புல்டோசர் இடிப்பு நடவடிக்கையை லக்னோவின் அக்பர் நகர் பகுதிகளில் அரங்கேற்றியது. அப்போது, சுமார் 1169 வீடுகளும், 101 வர்த்தக நிறுவனங்களும் இடிக்கப்பட்டன. பல தசாப்தங்களாக இஸ்லாமிய பெரும்பான்மைப் பகுதிகளாக இவ்விடங்கள் அறியப்படுபவை. குக்ரைல் ஆற்றங்கரை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ‘சிங்காரமயமாக்கல்’ திட்டத்தை அமல்படுத்துவது இவ்விடங்கள் இடிக்கப்பட்டதற்கான காரணமாக சொல்லப்பட்டது. அதனை ஒரு சூழலியல் சுற்றுலாத்தளமாக மாற்றுவதே நோக்கமென்றும் கூறப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் துவங்கப்பட்டு, மே மாத வாக்கில் இந்த இடிப்புகளுக்கு அலகாபாத் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. நமது கடந்த கட்டுரையில் ‘சட்டவிரோத புல்டோசர் இடிப்பு’ என்ற பதத்தை விவாதித்தோம். இதுதான் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கை குறித்த நமது ஆய்வின் மையப்புள்ளியாகும். ஆனால் இக்கட்டுரையில், சட்டத்திற்குட்பட்டு நிகழ்த்தப்படும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளே ஆனாலும், அவற்றின் சமூக, பொருளாதார மற்றும் மானுடவியல் பின்விளைவுகளை கோடிட்டுக்காட்டுவது அவசியம் எனக் கருதுகிறோம்.
குக்ரைல் ஆற்றை ஆக்கிரமித்ததாகக் கூறி அக்பர் நகர் வீடுகளை லக்னோ மேம்பாட்டு மையம் இடித்தது. நீதித்துறையும் இந்தக் கருத்தை ஆமோதித்து உறுதிசெய்தது. ஆனால் இப்படியாக அதனை நியாயப்படுத்தியபோதும், ‘சட்டப்பூர்வமாக’ நடத்துவதாக சொல்லப்படும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னால் பல கேள்விகள் பதிலளிக்கப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன.
எவ்வாறு அரசாங்க நிலத்தை அங்கு குடியிருந்தவர்களால் கைப்பற்ற முடிந்தது என்பது அடிப்படையான முதல் கேள்வி.
அடுத்ததாக, அவர்கள் தலைமுறை தலைமுறையாக எப்படி அங்கு தங்க அனுமதிக்கப்பட்டனர்?
அவர்களுக்கு சொந்தமில்லை என்று சொல்லப்படும் நிலத்திற்கு எப்படி அவர்கள் வரி செலுத்தி வந்துள்ளனர்?
அவர்களுக்கு எப்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது?
புல்டோசர் இடிப்புகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவிடும்போது, இந்த சிக்கல்களைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
சட்டத்திற்கு உட்பட்டதோ இல்லையோ, புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் சாமானியர்களை நிரந்தரமாக வறுமைக்குள் தள்ளுவது மட்டுமின்றி, அவர்களின் தார்மீக (அரசியல்) உரிமைகளையும் பறித்துவிடக்கூடியது. இதற்கு எளிதில் இலக்காவது விளிம்புநிலையில் வாழும் சமூகத்தினர்தான். தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் அடைத்து தனிமைப்படுத்துவதன் (தீண்டாமை) காரணமாக வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கொண்ட வீடுகளைக் கட்டிக்கொள்ளக்கூட போதுமான இடமில்லாமல் போகிறது. அதனால், அவர்களுக்கான வசிப்பிடங்களாக மிஞ்சியிருப்பது அந்தக் குறுகிய இடத்திற்குள்ளேயே அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானக் குடியிருப்புகள் மட்டும்தான். அவற்றையும் பிற்காலத்தில் நகர மேம்பாட்டின் பெயரால் இடிப்பதற்கு அரசாங்கங்கள் தேர்வு செய்துவிடுகின்றன. அங்கு வசிப்பவர்களின் வறுமை குறித்தோ அவர்கள் விளிம்புநிலையில் வாழும் மக்கள் என்பது குறித்தோ கவலைகொள்ளாமல் அவர்களது வீடுகளை இடித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிடுகிறது அரசு.
2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 2613 சேரிப் பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் 6.54 கோடி மக்கள் வசிக்கின்றனர். இது நகரங்களில் வாழும் இந்திய மக்கள் தொகையின் 17.4 சதவிகிதம் ஆகும். ஆனால் நிலுவையில் உள்ள குடிசை மாற்றுத் திட்டவரைவின்படி, கடந்த ஜனவரி மாதம் வரையிலும் சேரிகளில் வாழும் வெறும் 296,000 பேருக்கு மட்டுமே வீடு கட்டிக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. நிலமும் அதன் மீதான ஆதிக்கமும் அதிகாரமும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்குமென்பதை குறிப்பால் உணர்த்துவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. டெல்லி வளர்ச்சிக் கழக இணையதளத்தில் 69 அனுமதியற்ற குடியிருப்புகள் மேல்தட்டு வகுப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேல்தட்டு அல்லாதோர் ஆக்கிரமித்திருக்கும் குடியிருப்புகள் 1731 எண்ணிக்கையாக பதிவாகியுள்ளது. லக்னோ வளர்ச்சிக் கழகத்தின் 2021 மூலத்திட்ட வரைவின்படி 241 அனுமதியற்ற காலனிகள் உள்ளன.
ஆனால் வழக்கமாக ஏழைகள் வாழும் சேரிகளும், அனுமதிபெறாமல் வாழும் குடியிருப்புகளுமே நகர வளர்ச்சிக்காககோ அல்லது மேம்பாட்டிற்காகவோ இடிக்கப்படுகின்றன. வசதிபடைத்த மேல்தட்டு சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் இடிக்கப்படாமல் அவ்வாக்கிரமிப்புகளை மென்மையாகக் கையாள்கிறது அரசு. அதன் பொருள், இங்கு சட்டமும் விதிகளும் பாரபட்சமான முறையில் தான் அமலாக்கப்படுகின்றன என்பதே ஆகும்.
அக்பர் நகரின் புல்டோசர் இடிப்புகள் எல்லாமே, அமைப்பு ரீதியான பாகுபாட்டையும், விளிம்புநிலையாக்கல் சுழற்சியில் நிர்வாக அமைப்பின் சதியையும் வெட்டவெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன. (விளிம்புநிலைக்குத் தள்ளுவதில் நிர்வாக அமைப்பின் கையும் இருப்பது வெட்டவெளிச்சம் ஆகிறது.)
அக்பர் நகரில் நடத்தப்பட்ட புல்டோசர் இடிப்புகளைத் தொடர்ந்து குக்ரைல் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள பாண்ட்நகர், அப்ரார் நகர், ரஹிம் நகர் ஆகியவற்றில் வாழும் மக்களும் இப்போது பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அங்கு நிறைய வீடுகளில் மாநில நீர்ப்பாசனத் துறையினர், சிவப்பு மையால் அடையாளக்குறிகள் வரைந்துவிட்டுப் போயிருக்கின்றனர். பயத்தினாலும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் குடியிருப்புவாசிகள் அவர்களது பதிவுப் பத்திரம், வங்கிக் கடன் பத்திரம், மின்கட்டணம் மற்றும் சொத்துவரி ரசீதுகள் ஆகியவற்றைத் தேடியெடுத்துவைத்து, தங்கள் உரிமையை நிலைநாட்டும் விதமாக சிவப்புக் குறியீட்டிற்குப் பக்கத்திலேயே அவற்றை ஒட்டினர். இந்த எதிர்ப்பினால் வந்த தடுமாற்றமோ, அல்லது இன்னும் நேர அவகாசம் கோரும் பொருட்டோ முதல்வர் ஆதித்யநாத் 15 ஜூலை அன்று இனி அந்த சுற்றுவட்டாரத்தில் எந்த வீடும் இடிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் பார்த்தோமானால், சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு நிகழ்த்தப்படுவதாக சொல்லப்பட்டாலுமே, எந்தக் குடியிருப்புகளை இடிப்பதையும் நியாயப்படுத்தவே முடியாது. குறிப்பாக, பகுதிவாரியான நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும். இச்செயல்கள் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் சீர்குலைத்து, சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியான நெருக்கடிக்கு வழிவகுக்கிறது. இந்தியாவில் கட்டிட இடிப்புகளைப் பற்றிய சட்ட அமைப்புமுறையில், ‘போதிய குடியிருப்பு வசதி மற்றும் அதிரடியான இடமாற்றத்திலிருந்து பாதுகாப்பு’ ஆகிய உரிமைகளுக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இடப்பெயர்வை வேறு வழியில்லாதபோது மட்டுமே இறுதியான முடிவாகப் பரிசீலிக்க வேண்டும் என்கிறது. அதிலும், ஒரு ஒட்டுமொத்தக் குடியிருப்புப் பகுதியையே இடித்துத்தள்ளும் போது, ஒரு பெரும் மக்கள்கூட்டமே இடப்பெயர்வுக்கு உள்ளாகிறது. பல வருட பிணைப்பினால் உருவாக்கிக் கட்டிக்காத்த சமூக ஒத்துறவு மற்றும் கூட்டுநலன்களைத் தகர்த்து, ஒரு சமூக நிலையின்மைக்கு அது இட்டுச்செல்கிறது.
சட்டத்திற்கு உட்பட்ட இந்த இடிப்பு நடவடிக்கைகள் எல்லாம் வளர்ச்சியின் பெயரால் நிகழ்த்தப்படுவதால், அதனால் ஏற்படப்போகிற பொருளாதாரப் பின்விளைவுகளையும் பொருளாதாரச் சரிவையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. பார்ப்பதற்கு அழகற்றதாக சொல்லப்பட்டு எளிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டபிறகு, அவ்விடத்தில் அழகான கட்டிடங்களைக் கட்டுவதற்கு மிகப்பெரிய முதலீடுகள் தேவைப்படும். பெரும்பாலும் இடப்பெயர்வுக்கு உள்ளாகும் மக்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில், உச்சகட்ட ஏழ்மையையும் ஏற்றதாழ்வையும் சந்திப்பவர்கள்தான். இந்த நடவடிக்கைகளால் ஏற்கனவே சமூகத்தில் நிலவும் பாகுபாடு, மேலும் மோசமடையத்தான் செய்யும். அப்பகுதியின் உள்ளூர்ப் பொருளாதார சீர்குலைவிற்கு புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் உறுதியாக வழிவகுக்கும். அதன் தொடர்ச்சியாக, ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தித்திறனையுமே அது பாதிக்கிறது.
மிக முக்கியமாக, இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்களது வாழ்நாள் உழைப்பையும் அதில் ஈட்டிய ஊதியத்தையும் செலவிட்டுதான் அங்கே வீடுகளையே கட்டியிருக்கக் கூடும். அக்பர் நகரைச் சேர்ந்த ஃபர்ஹானா என்கிற நாற்பது வயதுப் பெண்மணி, இந்தி மொழியில் வெளியாகும் பிபிசி செய்தி ஊடகத்திடம் பேசுகையில், தன் கண்ணீரை அடக்கவியலாது பேசினார்.
“எல்லாவற்றையும் இழந்துதான் என் அப்பா இந்த வீட்டைக் கட்டினார். ஆனால் இப்போது நாங்கள் வீடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எல்லாமே எங்கள் கையை விட்டுப் போகிறது. என் குழந்தைப்பருவத்தை இங்குதான் கழித்தேன். எனது வளர் பருவத்தையும் இங்குதான் கழித்தேன். ஒருவேளை நான் இங்கேயே இறந்திருக்கவும் கூடும்” என்றார்.
‘உங்கள் வீடு உங்களுடைய கண்முன்னாலேயே இடிக்கப்படுவதால்’ ஏற்படும் மன அழுத்தத்தை, ‘வளர்ச்சி வரப்போகிறது’ என்கிற கனவைக் காட்டியோ அல்லது ‘அழகான ஊராக மாறிவிடும்’ என்று சொல்வதாலேயோ எவ்வகையிலும் ஈடுசெய்யவே முடியாது. அரசியல்வாதிகளும், நிலவுடைமையாளர்களும் பெருநிறுவனங்களும் செய்யும் கொடூரங்களால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை ஒருபோதும் அழகாக்கவே முடியாது.
This piece has been translated by Praveen Tulsi. Read the original in English here.
Related Posts


புல்டோசர் இடிப்புகள்: சட்ட வரையறைகளும், அதிலிருந்து விலக்கு பெறுதலும்
